Skip to main content

துரோகத்துக்கு முடிவு விரைவில் அமையும்... காலம் வலியது! - பொங்கலூர் மணிகண்டன்

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

pongalur manikandan comment about sasikala release and edappadi palanisamy
                                                    கோப்புப் படம் 

 

சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் ஓய்வு எடுத்த சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். தமிழகம் திரும்பும் அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதேநேரம், அவர் சென்னை வரும் வழியில் அவரது ஆதரவாளர்கள் வைத்திருந்த பேனர்கள், கட் அவுட்டுகளை போலீஸார் அப்புறப்படுத்தியுள்ளனர். 

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன், “சசிகலா ஆட்சி - கட்சியை மிகுந்த நம்பிக்கையோடு எடப்பாடியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். சிறையிலிருக்கும் போதே அவரது கணவர் மறைந்தார். 

 

துக்கம் விசாரிக்கக் கூட எவரும் போகாமல் பண்பாடற்ற முதல் துரோகத்தைச் செய்தார்கள். நல்லதுக்குச் செல்லாவிட்டாலும் கெட்டதுக்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்பதை மறந்து சாவுக்குக்கூடச் செல்லாமல் செய்நன்றிக்கே சாவு மணி அடித்தார்கள். 

 

கட்சியின் பெயர், கொடி, சின்னம், ஆட்சி, கட்சி என அனைத்தையும் நம்பி ஒப்படைத்துச் சென்று நான்காண்டுகள் கழித்து சிறை மீண்ட ஒரு பெண்மணி வரும் நேரத்தில் ஆட்சி அதிகாரம் கட்சி ஆதிக்கம் அனைத்தையும் காட்டி கட்டுப்பாடுகளையும் காவல்துறை மூலம் கட்டளைகளையும் நிறைவேற்றிக் கட்டுக்கடங்காத துரோகத்தைச் செய்து வரலாற்றில் கரும்புள்ளியை கருமையத்தில் கச்சிதமாக்கிய எடப்பாடி பழனிசாமியை எள்ளளவும் மன்னிக்கவே முடியாது என்பது என் திடமான கருத்து.

 

அவர் எண்ணிப் பார்க்க முடியாத இடத்திற்கு, எட்டிப் பார்க்க முடியாத உயரத்திற்குக் கண்ணிமைக்கும் நேரத்தில் மகுடம் சூட்டி மாலை அணிவித்து மாபெரும் மரியாதை கிடைக்கக் காரணமானவர் சசிகலா என்பதை எவராவது மறக்க முடியுமா?

 

ஆயிரம் என்ன பல்லாயிரம் குறைகளைக் கூட சசிகலா மீது  சரமாரியாகச் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், மனசாட்சியுள்ள மனிதர்கள் பதில் சொல்லுங்கள். ஜெயலலிதா இறக்கும் வரை சசிகலா இல்லாமல் அதிமுகவில் பதவி, பணம், செல்வாக்கு பெற்றவர் எவரேனும் உண்டா?

 

ஜெயலலிதா என்ற ஆளுமைக்கு அடைக்கலமாகவும், படைக்களமாகவும் விளங்கிய சசிகலாவே  அதிமுகவுக்கு அடித்தளமான தொண்டர்களை அளவு கடந்த பதவியில் அமரச் செய்து ஆச்சரியமூட்டினார் என்பதை  அமைச்சர்களான அனைவரும் அறிவார்கள்.

 

திமுக தலைவராக இருந்த கலைஞரை தங்கள் எதிரி என்று முன்னிறுத்தி எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆகியோர் அரசியல் செய்ததை மறந்து கலைஞரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி சுற்றம் சூழ ஆறுதல் கூறி அரசியல் பண்பாட்டைப் பாதுகாத்து பாராட்டைப் பெற்றவர்கள் பழனிசாமி அமைச்சரவை சகாக்கள். 

 

ஆனால் சொந்த தாயின் மேலாக தங்களைப் பாதுகாத்து பதவியில் அமர்த்தி உயர்த்திய சசிகலாவின் கணவரின் மறைவுக்குக் கூட  செல்லாமல் கண்டிப்புடன் பரோலை பயன்படுத்தி, நம்பிக்கைத் துரோகத்தால் மத்திய அரசுக்கு மண்டியிட்டு மன்னிப்பில்லாத மாபாதகத்தைச் செய்து முடித்தார்கள்.

 

இன்னுமா தாகம் தீரவில்லை. துரோகத்தின்  எல்லை நீள்கிறது. சசிகலாவுக்கு முன் நேருக்கு நேர் நின்று பேசும் துணிவில்லாத தர்மத்துக்கு யுத்தம் செய்த  துச்சாதனக் கூட்டத்தின் துரோகத்துக்கு முடிவு விரைவில் அமையும். காலம் வலியது”  எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்