“அண்மையில் வேலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள, காவல்துறையின் வன்கொடுமையும் பேரதிர்ச்சியை அளிக்கிறது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவரென காவல்துறையினரால் தேடப்படும் காட்பாடியை சார்ந்த ஜானி என்பவரை கைது செய்ய இயலாத நிலையில், அவரது குடும்பத்தினரை கைது, சிறை, அவமதிப்பு என மிகமோசமான சித்திரவதைகளுக்குள்ளாக்கி வருகிறது வேலூர் - விருதம்பட்டு காவல் நிர்வாகம்.
ஜானியின் மனைவி, மகள், தாய், பெங்களூரில் வசிக்கும் சகோதரி, மாமனார், மாமியார் மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தின் மீதும் வன்முறையை ஏவியுள்ளது காவல்துறை. குறிப்பாக, அவரது மகளான ஒன்பது வயது சிறுமியையும் காவல் அதிகாரிகள் சித்திரவதைக்குள்ளாக்கி வருகிறார்கள் என்பது கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது.
விருதம்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் புகழ் என்பவரின் தலைமையில்தான் இத்தகைய அத்துமீறல்களும், சித்திரவதைகளும் அரங்கேறியுள்ளன. கடந்த மார்ச் மாதம் ஜானியின் மனைவி ஷாலினியை விருதம்பட்டு காவல் அதிகாரிகள் கைது செய்து மூன்று நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். அவர் மீது எந்த வழக்குமில்லை. ஆனால், அவரைக் கைது செய்து கொடுமை இழைத்துள்ளனர். இந்த சித்திரவதையின்போது, ஒன்பது வயதான அவரது மகள் ஜெனிஷா எனும் சிறுமியும் விருதம்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு ஆளாகி இருக்கிறார். கடந்த 2018ல் பதிவான வழக்கொன்றில் ஷாலினியை வேண்டுமென்றே இணைத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறது விருதம்பட்டு காவல் நிர்வாகம்.
நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் முன்னிலையில், தான் சட்டவிரோத காவல் சித்திரவதைகளுக்கு ஆளானதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இதனை பொறுத்துக்கொள்ள இயலாத காவல் அதிகாரிகள் ஷாலினியின் மீது மேலும் ஒரு பொய் வழக்கை பதிவு செய்து கைது செய்துள்ளனர். பின்னர், ஷாலினியின் ஒன்பது வயது மகள் ஜெனிஷாவை, அரசு சிறுவர் காப்பகத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்திருக்கிறார். 43 நாட்களுக்குப்பின்னர், உயர் நீதிமன்ற ஆணையின்படி, சிறுமி ஜெனிஷா மீண்டும் தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இன்னும் அவரும், அவரது குழந்தையும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்படுவது தொடர்கிறது. காவல்துறையினரின் இத்தகைய அதிகார வரம்பு மீறல்களை- வன்கொடுமைகளை விசிக சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளாகியுள்ள ஷாலினி மற்றும் சிறுமி ஜெனிஷாவுக்கு நீதிகிட்டும் வகையில், இதனை உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரிக்க தமிழக அரசு ஆணையிட வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.