பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் ரூ.50,000 கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஹால்தியா நிறுவனம் முன்வந்திருப்பதாகவும், அதுகுறித்து அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆலை அமைவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் முதலீடுகள் மிகவும் அவசியம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி உணர்ந்திருக்கிறது. அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக உன்னதமான பல யோசனைகள் முன்மொழியப்பட்டிருந்தன. அதே நேரத்தில் தங்கக் கத்தி என்பதற்காக வயிற்றில் குத்திக் கொள்ள முடியாது என்பதைப் போல, முதலீடுகள் என்பதற்காக, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை சீரழிக்கக்கூடிய தொழில்திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத திட்டம் தான்.
கடலூர் மாவட்டத்தில் ஹால்டியா நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைத்தால் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும்; சுமார் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த நன்மைகளை விட பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம் ஆகும். கடலூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் வேதி ஆலைகளில் இருந்து வெளியாகும் நிலத்தில் சேர்ந்ததால் நிலத்தடி நீரில் டயாக்சின் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும்.
நிலத்தடி நீரில் டயாக்சின் கலந்திருப்பதால் அப்பகுதிகளில் வளரும் தென்னை மரங்களில் காய்க்கும் இளநீரிலும் டயாக்சின் உள்ளது; இதையெல்லாம் கடந்து நிலத்தடி நீரை பயன்படுத்தும் தாய்மார்களின் தாய்ப்பாலிலும் டயாக்சின் வேதிப்பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் புனிதமான மருத்துவப் பொருள் என்று போற்றப்படும் தாய்ப்பாலில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் கலந்திருந்தால், அந்தப் பகுதி மக்கள் வாழத்தகுதியற்றதாக மாறி விட்டது என்று தான் அர்த்தமாகும். அதனால் தான் கடலூர் மாவட்டம் சுற்றுச்சூழல் சீரழிவு மிகுந்த கறுப்பு மாவட்டம் என்றழைக்கப்படுகிறது.
முந்தைய திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை சீரழிக்கும் வகையில் இதேபோன்ற பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நாகார்ஜுனா நிறுவனத்தின் மூலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. முந்தைய திமுக ஆட்சியில் உயர் அதிகாரத்தில் இருந்தவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழக அரசின் வளங்களை தாரை வார்த்து 2008-ஆம் ஆண்டில் அந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஜெர்மனியில் 1970-ஆம் ஆண்டுகளில் மூடப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்ட பழைய எந்திரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அந்த ஆலை, சுத்திகரிப்பை தொடங்குவதற்கு முன்பே தானே புயலில் சிக்கி சேதமடைந்ததால் கடலூர் மாவட்டம் தப்பியது.
அந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டப்படுவதற்கு முன்பாகவே, நாகார்ஜுனா நிறுவனம் கோடிகளைக் குவிக்க வேண்டும் என்பதற்காக கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள 57,345 ஏக்கர் நிலங்களை வளைத்து ரூ.92,000 கோடியில் பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது 2006-11 தி.மு.க ஆட்சி தான். அத்திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டால், கடலூர் - நாகை மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதனால், அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. அதுமட்டுமின்றி, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கருத்துக் கேட்புக்கூட்டங்களை நடத்தினார். பா.ம.க.வின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், 2018-ஆம் ஆண்டில் நாகார்ஜுனா நிறுவனம் திவால் ஆனதாலும் அந்த திட்டம் முடங்கியது. அதனால், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் தற்காலிகமாக தப்பித்தன.
அப்போது தப்பித்த கடலூர் மாவட்டத்திற்கு ஹால்தியா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மூலம் மிகப்பெரிய ஆபத்தையும், சீரழிவையும் கொண்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல. காவிரி டெல்டாவின் கடைமடையான கடலூர் மாவட்டம் முப்போகம் விளையும் பூமியாகும். அந்த மண் தான் அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உணவையும் வழங்குகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டதால் அம்மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கும், உழவுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டனவோ, அதைவிட மோசமான பாதிப்புகள் ஹால்தியா ஆலை வந்தால் கடலூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
2008&ஆம் ஆண்டில் நாகார்ஜுனா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை என்ற சீரழிவை கடலூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் அப்போதைய திமுக அரசு செய்த மிகப்பெரிய தவறை, ஹால்தியா ஆலையை கொண்டு வருவதன் மூலம் அதிமுக அரசும் செய்யக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் ஹால்தியா ஆலை மட்டுமல்ல.... வளமான நிலத்தை நச்சு பூமியாக்கும் எந்த ஒரு பெட்ரோக் கெமிக்கல் திட்டத்தையும், தமிழகத்தில் எந்த பகுதியிலும் அதிமுக அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.