விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் பகுதியான எக்கியர்குப்பம் அருகே இருக்கும் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேரும் என தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 22 உயிரிழந்துள்ளனர். இது தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்திற்கான மூலப்பொருட்களை விற்றவர் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஆகியவை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வரும் 22ம் தேதி சின்னமலை பகுதியிலிருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணியாகச் சென்று ஆளுநரிடம் புகார் மனு அளிக்கவுள்ளனர். இதற்கான அனுமதி கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கையின் காரணமாகவே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற்றது. தன்னை தானே ஜல்லிக்கட்டு நாயகன் என சொல்லி கொள்ளும் ஓ.பி.எஸ். கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மெரினாவில் போராடியதன் விளைவாக மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது. குறிப்பாக போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது குடியரசு தின விழாவும் வந்தது. அப்போது குடியரசு தின விழாவை தன் தலைமையில் முதலமைச்சர் எனும் பதவியில் நடத்த நினைத்த ஓ.பி.எஸ். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸுக்கு உத்தரவிட்டு தடியடி நடத்தினார். இவர் ஜல்லிக்கட்டு நாயகனா? இந்தப் போராட்டத்தில் அப்பகுதி மீனவ மக்கள் கடும் பொருள் சேதத்தைச் சந்தித்தனர்” என்று பேசினார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள், ‘அன்று அமைச்சராக இருந்த நீங்கள் அவர் செய்தது தவறுதான் என்றால் அவருக்கு அன்றே எதிர்ப்பு தெரிவித்திருக்கலாமே’ எனக் கேட்டனர். அதற்கு அவர், “இப்ப கேள்வி கேட்டீங்கனு சொல்றேன்.. அப்ப இந்தக் கேள்வியை கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.