தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தற்போது, எதிர்க்கட்சியான திமுக.,வும் தங்களது தொண்டர்களுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பாஜக, பாமக, தேமுதிக கட்சியினர் மேயர் பதவி வேண்டும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும் பாமகவை வலுப்படுத்த பல திட்டங்களை பாமக தலைமை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் இரா. அருள் மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றியடைய பாமகவினர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் வரும் 2020 ஜனவரி 4இல் பூம்புகார் பகுதியில் நடைபெற உள்ள வன்னிய மகளிர் பெருவிழாவிற்கு சேலத்தில் இருந்து 10 ஆயிரம் பேரை அழைத்துச் செல்ல வேண்டும். அதே போல் ஒவ்வொரு ஊராட்சியிலும் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என்று முப்படைகள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசும் போது, 'சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, மதுரை, கடலூர் ஆகிய பெரிய மாவட்டங்களை பிரித்து மேலும் பல புதிய மாவட்டங்களை உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன் வர வேண்டும்' என்றும் கூறினார்.