Skip to main content

தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் புகார்...! 

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

Pmk complains demanding action against the election official

 

செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ மஸ்தான், அதிமுக கூட்டணி சார்பில் பாமகவைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும்  நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் பிரதான கட்சி வேட்பாளர்கள் இருவரும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், தொகுதியின் உதவி தேர்தல் அலுவலராக உள்ள மேல்மலையனூர் வட்டாட்சியர் மெகருன்னிசா என்பவர், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பாமக வேட்பாளர் ராஜேந்திரன் பல புகார்களை அளித்துள்ளார். ஆனால் இவரது புகாரின் மீது இதுவரை தேர்தல் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது. இதனால் பாமக வேட்பாளர் ராஜேந்திரன் தலைமையில் பாமக, அதிமுக கூட்டணி கட்சியினர் செஞ்சி நான்கு முனை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்த செஞ்சி காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் சாலை மறியலைக் கைவிட மறுத்துவிட்டனர். இதனையடுத்து செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேட்பாளர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் தேர்தல் அலுவலரிடம் இதுகுறித்து தெரிவித்து உடன் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். அதன்பிறகு மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திமுக வேட்பாளருக்கு ஆதரவாக உதவி தேர்தல் அதிகாரி செயல்படுவதாக கூறிய குற்றச்சாட்டு அதிகாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்