அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட விருதுநகர் - அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துப் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில், விருதுநகர் அதிமுக மேற்கு மா.செ.வும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியபோது; “கழகத்திற்குச் சோதனை வரும்போதெல்லாம் யார் நம்முடன் இருக்கிறார்களோ, அவர்களே இப்போதும் இருக்கின்றனர். திடீரென வந்தவர்கள் திடீரென மாயமாகிவிட்டார்கள். அதிமுக சாகா வரம்பெற்ற இயக்கம். 1996-ல் கழகத்திற்கு ஏற்படாத சோதனையா தற்போது ஏற்பட்டுள்ளது? அந்த நேரத்தில்கூட திருத்தங்கல் நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று என்னால் வைஸ் சேர்மன் ஆகமுடிந்தது. சோதனை என்பது அதிமுகவுக்குப் புதிதல்ல.
எறிகின்ற பந்து எப்படித் துள்ளி எழுந்து வருமோ, அதுபோல் சோதனை வரும்போது அதிமுக மீண்டும் எழும். இங்கிருந்து பலபேர் வேறு இடத்திற்குப் போயிருப்பார்கள். பழத்தோட்டத்தைத் தேடி அவர்கள் பறந்திருக்கின்றனர். நாம் அப்படியல்ல, தோட்டக்காரர்கள். நல்ல விதைகளை விதைத்து, விளைவித்து தோட்டத்தைப் பாதுகாத்து, உற்பத்தி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இனி ஒவ்வொரு அடியையும் சிறப்பாக, கவனமாக எடுத்துவைப்போம். பலதடவை நாம் ஏமாந்து இருக்கலாம். இனிமேல் ஏமாறக்கூடாது. சோதனையான இந்தக் காலகட்டத்தில் நம்மோடு இருப்பவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். அதிமுக ஒவ்வொரு தொண்டனையும் வாழவைத்திருக்கிறது. ஆயிரம் பறவைகள் இளைப்பாற, அதிமுக என்ற மிகப்பெரிய ஆலமரம் விழுதூன்றி நிற்கிறது. ஆலமரத்திற்கும் பறவைகளுக்கும் நாம் பாதுகாப்பாக இருப்போம்.” எனச் சான்றிதழ் பெற்ற பணிமனை புதிய நிர்வாகிகளுக்குத் தெம்பூட்டினார்.
அதிரடியாகப் பேசும் கே.டி.ராஜேந்திர பாலாஜியை பந்து, பழத்தோட்டம், ஆலமரம், பறவைகள் என்றெல்லாம் எடுத்துக்காட்டுகளுடன் பேசுபவராக, சோதனைக்காலம் நிறையவே மாற்றியிருக்கிறது.