சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடும் படி எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இதற்கு செவிகொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. காவல்துறையினர் நடத்திய தடியடியில் ஒரு முதியர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது.
இது குறித்து பாமகவின் ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, தி.மு.க.தலைவர் மு.க,ஸ்டாலின் போராட்டங்களை தூண்டி விடுகிறார் என்றும், மு.க,ஸ்டாலினுக்கு வேறு எதுவும் தெரியவில்லை. அதுதான் பிரச்சனை. மக்களைத் தூண்டி ஏதோ இரண்டு கோடி கையெழுத்து என்று மக்களை எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை திசை திருப்பி இதுபோன்ற போராட்டங்களைத் தூண்டிவிட்டு இதில் திட்டமிட்டு வன்முறைகளை தூண்டி தி.மு.க போன்ற கட்சிகள் மறைமுகமாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலமாக முதல்வர் எடப்பாடி அறிவித்ததற்கு நன்றி என்றும் கூறினார். அன்புமணி ராமதாஸின் இந்த கருத்துக்கு திமுகவினர் பலர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.