ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னணியில் உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கூட்டணியைச் சேர்ந்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''பாஜகவுக்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணியை ஏற்படுத்த தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஐந்து சுற்று எண்ணிக்கை முடிந்திருக்கிறது. 5 சுற்று எண்ணிக்கையிலே 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னணியில் இருக்கிறார். ஏறத்தாழ 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்பதை உணர முடிகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகால திமுக அரசின் நல்லாட்சி நிர்வாகத்திற்கு மக்கள் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விசிக சார்பில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி அங்கீகாரம் வழங்கக்கூடிய ஒரு முடிவை மகத்தான வெற்றியை வழங்கி இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு நன்றி. இது காங்கிரசுக்கான வெற்றி என்பதை விட காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் கொடுத்த வெற்றியாக அமைந்திருக்கிறது'' என்றார்.