சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் அருகே புதன்கிழமை(10.4.2024) திருச்சின்னபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அப்போது அவர் அங்கே கூடியிருந்த பொது மக்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் பேசுகையில், இந்தியா முழுவதும் பாஜக-வை எதிர்ப்பவர்களை வருமான வரித்துறை - அமலாக்கத்துறை கொண்டு ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை கைது செய்து முடக்கி வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக- வை எதிர்ப்பதால் நான் சிதம்பரத்தில் தங்கியிருந்த வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் மிரட்டப் பார்க்கின்றனர், என்று குற்றம் சாட்டிப் பேசினார். மேலும், எனது வெற்றியை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற செயலில் பாஜகவினர் ஈடுபடுகின்றனர். வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தி உள்ளார். எனவே மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்றார்.
பிரச்சாரத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.