கரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் கூறியது கண்டிக்கத்தக்கது. முதலில், மக்கள் மீது பழி சுமத்திய அரசு, தற்போது கடவுள் மீது பழியைச் சுமத்த முயற்சிக்கிறது. குளறுபடிக்கு மேல் குளறுபடி, குழப்பத்திற்கு மேல் குழப்பம், குற்றத்திற்கு மேல் குற்றத்தை அரசு செய்கிறது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நேரத்தில் கரோனா முடிவுக்கு வருவது பற்றி கடவுளுக்குத்தான் தெரியும் என்று எடப்பாடி சொன்னது, பல தரப்பிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் எடப்பாடியின் இந்த ஸ்டேட்மெண்ட் பொதுமக்களையும் திகைக்க வைத்துள்ளது. கடவுளுக்குத்தான் தெரியும்னா, நீங்கள் எதுக்கு லாக் டவுனை அறிவித்தீர்கள்? நாங்க கும்புடுற கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை பூட்டி வச்சிட்டு, கடவுளை எதுக்குக் கை காட்டுறீங்கன்னு மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தேர்தலுக்கு எங்ககிட்ட ஓட்டு கேட்பீங்களா? கடவுள்கிட்ட போய்க் கேட்பீங்களான்னு காரசாரமாக கோபத்தைக் காட்டிவருகிறார்கள். மக்களின் இந்த மனநிலை பற்றிய ரிப்போர்ட்டும் எடப்பாடிக்கு உளவுத்துறையால் அனுப்பப்பட்டிருக்கு என்று சொல்கின்றனர்.