நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 ஆம் தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் அமர்வின் போது கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது அமர்வு விவாதமே நடைபெறாமல் இன்றுடன் (06.04.2023) முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது ஒற்றுமை பயணத்தை முடித்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குச் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. அதேசமயம் விலைவாசியும் உயர்ந்துள்ளது. ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இந்தியாவின் மொத்த பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். அதனால் மக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளின் உற்பத்தி சரிந்து, சீனாவிற்கு இடம் பெயர்ந்துள்ளது” என்று பல கருத்துகளை முன்வைத்தார். இதற்கு உலக அரங்கில் ராகுல் காந்தி இந்தியாவின் புகழைக் கெடுத்துவிட்டதாக பாஜகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும் அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த இரு பிரச்சனைகளைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு தொடங்கியதிலிருந்து ஆளுங்கட்சி எம்.பிக்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பியும், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியும் வருகின்றனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன. ஒரு சில நாட்கள் மட்டுமே விவாதங்கள் நடைபெற்றது. பெரும்பாலான நாட்களில் அவை கூடியதும் அவையில் அமளி ஏற்பட்டதால் பெரும்பாலும் மதியம் 2 மணி வரையிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிறகு மதியம் இரண்டு மணிக்கு கூடிய இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.
இதனைத் தொடர்ந்து, அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. அதே நேரம் பாஜக தரப்பினர் இதற்கும் மத்திய அரசிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்து வருகின்றனர். மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் கடும் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எவ்விதமான முக்கிய முடிவுகளும் எடுக்கப்படாமல் இன்றுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.