பழிவாங்கும் நோக்கத்தோடு ப.சிதம்பரம் கைது செய்திருப்பதை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று (22.8.2019) வியாழக்கிழமை நடத்தும் படி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய நிதி அமைச்சராக திரு ப.சிதம்பரம் அவர்கள் பொறுப்பு வகித்த போது மே 2007 ஆம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ். ஊடகத்திற்கு அந்நிய முதலீடு பெறுவதற்கு வழங்கிய ஒப்புதல் குறித்து 10 ஆண்டுகள் கழித்து 2017 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா அந்நிய முதலீடு பெறுவதற்கான அனுமதியை பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் செயலாளர் தலைமையில் 6 செயலாளர்கள் அடங்கிய அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம்தான் ஒப்புதல் வழங்கியது.
இந்த அனுமதிக்கான பரிந்துரை அன்றைய நிதியமைச்சராக இருந்த திரு ப.சிதம்பரம் அவர்கள் மற்ற கோப்புகளுக்கு எப்படி ஒப்புதல் கொடுப்பாரோ அதே போல அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் எடுத்த முடிவுக்கு ஒப்புதல் வழங்கினார். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுக்கு ஒப்புதல் வழங்கியதை தவிர இதில் நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்களுக்கு எந்த பங்கும் இல்லை.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் எதிர்க்கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடுமையான விமர்சனங்களை அவர் தொடர்ந்து செய்து வந்தார். இதை சகித்துக்கொள்ள முடியாத நரேந்திர மோடி, அமித்ஷா போன்றவர்கள் தீட்டிய பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக மத்திய புலனாய்வுத் துறையை திரு ப.சிதம்பரத்திற்கு எதிராக ஏவி விட்டுள்ளனர். இதன்மூலம் அவரது குரலை ஒடுக்கிவிடலாம் என பா.ஜ.க. கனவு காண்கிறது.
இந்த பின்னணியில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் திரு ப.சிதம்பரம் பெயர் இல்லை. இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட முன் ஜாமீன் மனுவை 7 மாதங்கள் கழித்து தள்ளுபடி செய்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கியது. உச்சநீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்காக இரவு பகலாக மனுவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்ட திரு ப.சிதம்பரம் அவர்களின் வீட்டிற்கு மத்திய புலனாய்வுத் துறையினர் அனுப்பப்பட்டனர். அவர் வீட்டில் இல்லை என்றதும் இரண்டு மணி நேரத்தில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இத்தகைய அணுகுமுறை சி.பி.ஐ. வரலாற்றில் எப்போதும் நடந்ததில்லை. எவரையாவது விசாரணைக்கு அழைத்தால் குறைந்த பட்சம் 7 நாட்களாவது அவகாசம் தரவேண்டும். ஆனால் எந்த அவகாசமும் தராமல் இருந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலத்திற்கு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து, ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றார். இவரை பின்தொடர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டின் கதவு திறப்பதற்கு சில நிமிடங்கள் கூட பொறுமையாக இல்லாமல் சுவர் ஏறி குதித்து வீட்டின் கதவை திறந்ததும்
உள்ளே இருந்து கதவை திறந்து நூற்றுக்கு மேற்பட்ட சி.பி,ஐ அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தனர். எதோ மிகப்பெரியகுற்றவாளியை கைது செய்வதை போல ஒரு நாடகத்தை சி.பி.ஐ நிகழ்த்தியிருக்கிறது. இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் மூலமாக திரு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட 3 நாள் அவகாசத்திற்குள் ப.சிதம்பரத்தை கைது செய்யவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா துடிப்பது நமக்கு தெரியாமல் இல்லை. எத்தனையோ அடக்குமுறையை காங்கிரஸ் கட்சி சந்தித்திருக்கிறது.
இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதற்கு நிதியமைச்சராக பொறுப்பு வகித்து 9 முறை பட்ஜெட் சமர்ப்பித்த திரு ப.சிதம்பரத்தை கைது செய்திருப்பதன் மூலம் நரேந்திரமோடி, அமித்ஷா வின் பழிவாங்கும் படலம் வெளிபட்டிருக்கிறது.
எனவே, பா.ஜ.க. வின் சிறைச்சாலைகளை கண்டு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சமாட்டார்கள். எந்த சிறையையும் சந்திக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்கிறார்கள். பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கு நீண்டநாள் நீடிக்காது.
மத்திய பா.ஜ.க. அரசு, தமது கைப்பாவையாக உள்ள மத்திய புலனாய்வுத் துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு திரு ப.சிதம்பரம் கைது செய்திருப்பதை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாளை (22.8.2019) வியாழக்கிழமை நடத்தும் படி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.