நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் 27 ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், “மக்களோடு மக்களாகத் தொடர்ந்து நாம் களத்தில் தொடர்ந்து நிற்கப்போகிறோம். அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உண்மையாக, உயிராக, உறவாக நாம் உள்ளோம். அவர்களின் ஆசீர்வாதத்தாலும், அமோக ஆதரவாலும், நம்மைத் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான நம்பிக்கை உள்ளது. நூறு சதவீதம் இந்த நம்பிக்கை உள்ளது.
இருந்தாலும் அப்படி நிறைவாக இந்த நிலையை அடைந்தாலும், நம்மை நம்பி, நம் செயல்பாட்டை நம்பி நம்மோடு சில பேர் வரலாம் இல்லையா?. அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா?. அப்படி வருபவர்களையும் அரவணைக்கவேண்டும் இல்லையா?. நமக்கு எப்போது நம்மை நம்பி வருபவரை அரவணைத்துத் தானே பழக்கம். அதனால் நம்மளை நம்பி களமாட வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும். 2026ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” எனப் பேசினார். கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறியதைத் தொடர்ந்து, ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சரவணன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தற்போது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “விஜய் நடத்திய மாநாட்டில் அவர் பேசியதில் சில விஷயங்கள் மகிழ்ச்சியைத் தருகிறது. சில விஷயங்கள் மகிழ்ச்சியைத் தரவில்லை. எதுவாக இருந்தாலும், அவர் கட்சி தொடங்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். தமிழக அரசியலிலும் ஆட்சியிலும் பங்கு, அரசியலிலும் பங்கு என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும். ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதை தற்போதே எப்படிச் சொல்ல முடியும்.
ஒரு காலத்தில் மத்தியில் தனி கட்சிதான் ஆட்சி செய்துவந்தது. அப்போதெல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கே கிடையாது. ஆனால் 1996 தேர்தலுக்குப் பிறகு அது சாத்தியமானது. சாத்தியமில்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியமாகலாம். ஆகையால் இதுகுறித்து போகப்போகத்தான் சொல்ல முடியும். பாசிசம், பாயாசம் என்று விஜய் பேசியது சினிமா வசனம் போல் தான் தெரிகிறது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்தார்.