சட்டமன்றத்தில் எதிர்கட்சித் துணத்தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை மாறிமாறி சொல்லி வருகின்றனர்.
ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்றார் எடப்பாடி பழனிசாமி. மேலும் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் துணத்தலைவர் இருக்கை தொடர்பாக ஸ்டாலினுடன் அரை மணிநேரம் அமர்ந்து பேசியுள்ளார் என்றும் குற்றம் சுமத்தினார். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், “முதல்வருடன் தனியாக அரை மணி நேரம் பேசினேன் என பழனிசாமி நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார். அப்படி நிரூபிக்காவிட்டால் பழனிசாமி விலகுவாரா? என காட்டமாக பதில் அளித்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் நடந்த அதிமுக கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆட்சி நீடிக்குமா எனக் கேட்டார்கள். ஆனால் ஆட்சியும் நீடித்து கட்சியும் ஒற்றுமை ஆனது. ஆட்சியை பொறுத்தவரை, ஒரு இடைத் தேர்தல் வருகிறது. 22 தொகுதிகளில் இடைத் தேர்தல் வருகிறது. ஓபிஎஸ் மாவட்டத்தில் மட்டும் இரண்டு தொகுதிகளில் வருகிறது. ஒன்று ஆண்டிப்பட்டி மற்றொன்று பெரியகுளம். எம்.பி தேர்தலுடன் அந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. 22 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஆட்சியை தக்க வைக்க முடியும். ஓபிஎஸ், ஜெயலலிதாவின் அரசு நீடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அதிமுக வேட்பாளர்களை அந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்திருக்க வேண்டும் தானே. ஆனால் இரு வேட்பாளர்களும் தோற்றனர். அதே வேளையில் ஓபிஎஸ் மகன் எம்.பி தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துவிட்டோம்.
அடுத்து 2021 தேர்தல் நடந்தது. அதிலும் சூழ்ச்சி செய்தார். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். நமக்கு துணை முதல்வர் பதிவையை தான் கொடுப்பார்கள் என்றெண்ணி அந்த மாவட்டத்திலேயே இவரைத் தவிர யாரும் வெற்றி பெறவில்லை. இவர் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதி இவர். இவரது மகன் ரவீந்திரநாத். முதல்வரை சந்திக்கிறார். வெளியில் வந்து தொகுதிப் பிரச்சனைக்காக சந்திக்கிறேன் என சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் என்ன சொன்னார். அர்ப்பணிப்புள்ள முதல்வரை நான் எங்கும் பார்க்கவில்லை எனக் கூறுகிறார். இதனால் தான் எடப்பாடி பழனிசாமி அவர்களை பி டீம் என அழைக்கிறார்” எனக் கூறினார்.