
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருப்பதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் தேர்தல் களத்தில் குதித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதேபோல் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததில் இருந்து தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், துணை முதல்வர் ஒ.பி.எஸ். மட்டும் தனது தொகுதியில் உள்ள நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை தேர்தல் பிரச்சாரத்தில் குதித்து வருகிறாரே தவிர, தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.
இந்தநிலையில்தான், ஒ.பி.எஸ். தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகும் புதிய பிரச்சார வாகனத்தை ஒ.பி.எஸ்.சின் இளைய மகனான ஜெயபிரதீப், திருப்பதிக்குக் கொண்டு சென்று அங்கு அய்யரை வைத்து சிறப்பு பூஜை செய்திருக்கிறார். இந்தப் பிரச்சார வாகனத்தில் முன்பகுதியின் நடுவில் ஜெயலலிதா படம் பெரிதளவில் உள்ளது. ஆனால், இந்த வாகனத்தின் உள்பகுதியில் ஒ.பி.எஸ். உட்காரும் இடத்திற்கு எதிரே, ஒ.பி.எஸ். எப்பவும் தனது காரில் வைக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இந்த பிரச்சார வாகனத்தில் இல்லை. ஆனால், அந்த இடத்தில் வேல் படம் போட்டு வைக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டு கட்சிக்காரர்களே அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதோடு திருப்பதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட ஒ.பி.எஸ்.சின் பிரச்சார வாகனத்தையும் சென்னையில் ஒ.பி.எஸ். வீட்டில் கொண்டு வந்து தற்போது நிறுத்தியிருக்கிறார்கள்.

இன்னும் ஒரு வாரத்தில் ஒ.பி.எஸ். தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்க இருப்பதால், அதற்கான பணிகளில் கட்சி பொறுப்பாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே கடந்த மாதம் ஒ.பி.எஸ்.சின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையிலிருந்து வந்த முக்கிய அதிமுக பிரமுகர் ஒருவர் ஆறு அடி உயரத்தில் வெள்ளியினாலான வேலை பரிசாக கொடுத்தார். அதைத் தொடர்ந்து தற்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் வேல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.