முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று (02-11-23) விசாரணைக்கு வந்தது.
அப்போது சசிகலா தரப்பில் கூறியதாவது, “அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து பொதுச் செயலாளர் ஆன சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது. இது தொடர்பான நடைமுறையே சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கவோ அல்லது கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து, நீதிபதிக்கும், சசிகலா தரப்புக்கும் காரசார வாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று (03-11-23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன், “ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தற்போது வரை தொடர்கிறார்கள். அதனால், இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கியது செல்லும்” என்று கூறினார்.