Skip to main content

'ஓபிஎஸ்ஸா இபிஎஸ்ஸா' - தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

 'OPS or EPS'- Election Commission to advise tomorrow

 

பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அதிமுகவின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, கர்நாடகத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் வகையில் கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. எனவே, இந்த கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார்.

 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இ.பி.எஸ் தரப்பு, ஏற்கனவே பல முறை இதுபோன்ற பதிலையே தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. கடந்த ஜூலை 2022 முதல் இதனையே கூறுகின்றனர். ஆனால், முடிவெடுக்கவில்லை. மேலும் கர்நாடகத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். எனவே 10 நாட்கள் அவகாசம் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான மூல வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்கக் கூடாது. தங்களது தரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். 

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கடந்த 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ், ஏற்கனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்த நிலையில், அந்த அவகாசத்தை வழங்குவதாகவும் 10 நாட்களில் அதிமுக சட்டவிதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக் கோரி இபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் எனவும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். 

 

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என இபிஎஸ் செய்துள்ள மனு மீது தேர்தல் ஆணையம் நாளை பரிசீலனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜ்குமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனை நாளை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆவணங்களைத் தயாரித்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். அந்த ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தனது அடுத்தகட்ட முடிவு என்ன என்பதை நாளை நடக்கவிருக்கும் ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யும். இரண்டு தரப்பு ஆவணங்களின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படலாம் அல்லது இரண்டு தரப்புகளை நேரில் அழைத்து விளக்கங்களைக் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விரும்பினால் அதற்கான நடவடிக்கையும் எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்