ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டமானது இன்று நடைபெற்றது. பாஜக தன் நிலையைத் தெளிவுபடுத்தாத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன; இடைத்தேர்தலில் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.
இந்நிலையில், புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகத்தை ஓபிஎஸ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியினரை ஓபிஎஸ் நேரில் சந்தித்திருந்த நிலையில், தற்பொழுது ஏ.சி.சண்முகத்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக எடுக்கும் முடிவையே நாங்கள் ஆதரிப்போம் என ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.