அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பி. ரவீந்திரநாத் நீக்கப்பட்டுவிட்டார். எனவே அவர் அதிமுக கிடையாது. மக்களவையில் ரவீந்திரநாத் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அவர் தகுதியை இழந்துவிட்டார். எனவே மக்களவை சபாநாயகர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அவரது அங்கீகாரத்தைத் தடை செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக சார்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து இந்த மனுவை அளித்துள்ளார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், “ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக தொடரக்கூடாது. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்ற அனுமதிக்கக்கூடாது என ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றங்களில் பல்வேறு வழக்கு நிலுவையில் இருந்தது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் அங்கீகாரத்திற்கு பின் ரவீந்திரநாத்தினை பாராளுமன்றத்தில் அதிமுக உறுப்பினராக கருதக்கூடாது என இன்று சபாநாயகரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள கடிதம் கொடுக்கப்பட்டது. அதை பரிசீலித்து முடிவு செய்வதாக சபாநாயகர் உறுதி அளித்துள்ளார்.
தேர்தல் ஆணையமும் நீதிமன்றங்களும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்கிறோம் என அறிவித்துள்ளது. ஓபிஎஸ் நீதிமன்றத்தில் ஒரு கருத்தையும் பொதுவெளியில் ஒரு கருத்தையும் சொல்லிக்கொண்டு தன்னை நம்பி வந்தவர்களையும் ஏமாற்றிக்கொண்டு மக்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கும் ஒரு கபடதாரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.