நேற்று (18.08.2021) பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாட்டில் நடந்த கொள்ளை, கொலை தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கை மீண்டும் தற்போதுள்ள அரசு கையிலெடுத்துள்ளது” என்று பேசினார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். கொடநாடு கொள்ளை, கொலை தொடர்பாக முதல்வர் பேசுகையில், ''கொடநாடு கொலை வழக்கில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல நீங்களே அந்தப் பிரச்சனையைக் கிளப்புகிறீர்கள். அந்த மாதிரிதான் அதிமுகவினரின் போக்கு உள்ளது'' என்று கூறினார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். வரும்போதே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையை அதிமுக இரண்டு நாட்கள் புறக்கணித்திருக்கும் நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓபிஎஸ் இருவரும் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்துள்ளனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் உள்ளனர். கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையை அதிமுக புறக்கணித்திருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக பொய்வழக்கு போடுவதாக இந்தச் சந்திப்பில் ஆளுநரிடம் முறையிட்டு மனு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.