ஆன்லைன் விளையாட்டு பற்றி ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூன் மாதம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 19- ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அவசரச் சட்டத்திற்கு ஆறு மாதங்களும், சட்ட மசோதாவிற்கு ஆறு வாரத்திற்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் சட்ட மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலவரையறை 27 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழக ஆளுநரின் கேள்விக்குத் தமிழக அரசின் சார்பில் இன்று மாலைக்குள் பதில் அளிக்கப்படும் என சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.