விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்ரவாண்டியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “இரட்டை இலை சின்னம் இல்லையென்றாலும் இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி சின்னம் நம்மிடம் இருக்கிறது. அனைத்து நிலையிலும் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளச்சாராயம், போதைப்பொருள் நிறைந்த ஆட்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், “நானும், ஒ. பன்னீர்செல்வமும் இந்த கூட்டணியில் இருக்கிறோம். எனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் பயன்படுத்த பாமகவிற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.