அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா' நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கி நேற்றைய இதழ் வெளியாகியிருந்தது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. அதைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (27/06/2022) காலை 10.00 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க.வின் தலைமைக் கழகம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி சொல்லத்தக்கதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று (26/06/2022) காலை தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மூன்று நாட்கள் தனது ஆதரவாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதால், அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் இன்று காலை சென்னை திரும்புகிறார். அதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக, தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதனிடையே, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.