காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10.01.2025 அன்று தொடங்கியது. இன்று (17/01/2025) வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று மதியம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் மனீஷியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதற்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் எக்காரணத்திற்காகவும் வேட்புமனு நிராகரிக்கப்படக்கூடாது என்பதற்காக தலைமையின் உத்தரவின் பேரில் மா.கி.சீதாலட்சுமி சார்பில் மூன்று முறை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், மாற்று வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா என்பவரும் வேட்புமனு கொடுத்துள்ளாராம்.