காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. மேலும், முதல்வர் ஸ்டாலின் அதை திறந்து வைக்கவுள்ளார். மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரைக்கும் செல்லும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ‘பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் தாமதிப்பதால் மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்படுகிறது; அதனால் மாற்று நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டுள்ளதா’ என்ற கேள்விக்கு, “அதற்காகத்தான் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். அதுவும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். நாங்கள் நினைக்கிறது எல்லாம் நடந்திருந்தால் ஆளுநர் விவகாரத்தில் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது” என்றார்.
தமிழகத்தில் எல்லா பல்கலைக்கழகத்திற்கும் ஒரு பெயர் இருக்கிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படுமா என்ற கேள்விக்கு, “இது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஏற்கனவே இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயர் வைக்கலாமா அல்லது இனி புதியதாக உருவாகவுள்ள பல்கலைக்கழகத்திற்கு வைக்கலாமா என்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கிறதா? உதயநிதி துணை முதல்வராவதாகத் தகவல் வெளியாகி வருகிறதே என்ற கேள்விக்கு?, “இப்போது வந்திருக்க செய்திப்படி மத்திய அமைச்சரவையில் தான் மாற்றம் இருக்கிறது” என்று சிரிப்புடன் பதிலளித்தார்.