தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) தொடங்கியது. இந்த நிலையில், தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மாநில மற்றும் தேசிய கட்சிகள் அறிவித்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது தி.மு.க. தலைமை. அதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில், போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில், 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். அதன்படி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதி- பாலுசாமி, சூலூர் சட்டமன்றத் தொகுதி- பிரிமியர் செல்வம் (எ) காளிச்சாமி, திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி- ஈஸ்வரன் (கட்சியின் பொதுச்செயலாளர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.