![Nellai AIADMK candidate change](http://image.nakkheeran.in/cdn/farfuture/Iup-_HhwEKtqkf6aixsoN2zx7CEaPcyI3Y480m1rEAk/1711197939/sites/default/files/inline-images/23_99.jpg)
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என அனைத்தையும் முடித்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி அதிமுக இரண்டு கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதிமுக நெல்லை தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துசோழன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டு ஜான்சி ராணி அதிமுக நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுகவில் இருந்து விலகி 15 நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துசோழனுக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தீர்கள் என்று கட்சியினர் மத்தியில் அதிருப்தி எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டு திசையன் விளை பேரூராட்சி தலைவராக உள்ள ஜான்சி ராணி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.