நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி மற்றும் திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர். செந்தில்குமார் ஆகியோர் ட்விட்டரில் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வாயிலாக கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பல அரசியல் தலைவர்களும் ட்விட்டர் வாயிலாகவே தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் சில நேரம் இரு வேறு கட்சியை சார்ந்த தலைவர்கள் நட்பு ரீதியாகவோ அல்லது காரசார விவாதத்திலோ ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது.

அந்த வகையில் சீமான் மேடை பேச்சு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர். செந்தில்குமாரிடம் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி கேள்வி ஒன்றை முன்வைத்தார். அதற்கு பதிலளிக்காமல் செந்தில்குமார் எம்.பி தவிர்த்துள்ளார்.
டாக்டர். செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில், சீமான் பேசிய வீடியோ ஒன்றினை பதிவிட்டு "அட சீமான்... சீமான்... உங்கள் நகைச்சுவை உணர்வை பாராட்டுகிறேன்" என பதிவிட்டிருந்தார். இதற்கு தனது ட்விட்டரில் பதிலளித்திருந்த நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி
"எல்லாவற்றுக்கும் பெரியாரை துணைக்கு அழைக்கிற நீங்கள் திராணியிருந்தால்,' பெரியார் வழியில் இராவணலீலா நடத்துவோம்' என்று உங்கள் தலைவரை பேசசொல்லுங்களேன்!பார்ப்போம்
அப்போது தெரியும் யாரு துணிச்சலா பேசுறாங்க.யாரு காமெடி பண்றாங்கன்னு!சவாலை ஏற்க திராணி இருக்கா மருத்துவரே?" என கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் இதற்கு டாக்டர். செந்தில்குமார் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாத சூழலில் நாம் தமிழர் தொண்டர்கள் பலரும், அந்த கேள்விக்கு பதிலளிக்கக்கூறி வலியுறுத்தி வருகின்றனர்.