திருச்சியில் காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா என்பவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
உலகமே மகளிர் நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், திருச்சி தூவாக்குடி சாலையில் நேற்றிரவு கருவுற்ற பெண்மணிக்கு காவல்துறையால் பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. தஞ்சை சூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் கருவுற்ற தமது மனைவி உஷாவுடன் இரு சக்கர ஊர்தியில் வந்த போது, அவர் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக அவரது வாகனத்தைப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததில் இருவரும் நெடுஞ்சாலையில் விழுந்துள்ளனர். சாலையில் விழுந்த உஷா மீது மூடுந்து மோதியதில் அவர் அங்கேயே உயிரிழந்தார். கணவர் ராஜா படுகாயங்களுடன் திருச்சியிலுள்ள மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
இந்த விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் மனித நாகரிகத்துக்கு சற்றும் ஒவ்வாதது ஆகும். தூவாக்குடி பகுதியில் தலைக்கவச சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் காமராஜும், அவரது குழுவினரும் கை காட்டிய போது ராஜா மிதமான வேகத்தில் நிற்காமல் சென்றுள்ளார். இது காவல்துறை மீதான அச்சத்தால் பலராலும் செய்யப்படும் ஒன்று தான். ராஜா பயங்கரவாதியோ, கடத்தல் காரனோ இல்லை என்பதால் அவரை விட்டிருக்கலாம்; இல்லாவிட்டால் அவரை மறித்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், பொறுப்பற்ற முறையில், மிருகத்தனமாக செயல்பட்ட ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று ராஜாவின் இரு சக்கர ஊர்தியை எட்டி உதைத்ததாலேயே அந்த வாகனம் நிலைதடுமாறி விழுந்துள்ளது. சாலையில் விழுந்த உஷா சுதாரிப்பதற்குள் அவர்களுக்கு பின்னால் வந்த மூடுந்து மோதி இறந்தார்.
ஒருவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக அவரது வாகனத்தை எட்டி உதைக்கும் அதிகாரத்தை காவலர்களுக்கு எந்த சட்டம் வழங்கியிருக்கிறது? அப்பாவி இணையரை எட்டி உதைத்து உயிரழக்கும் நிலைக்கு தள்ளுவது தான் காவல்பணியா? காவல்துறையினரின் இத்தகைய அணுகுமுறைக்கு இது தான் முதல் உயிரிழப்பு என்று கூறிவிடமுடியாது. சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இது போன்று பல நிகழ்வுகள் நடந்துள்ளன. தலைக்கவசம் அணியாதவர்களை விரட்டிச் சென்றதால் சாலைத் தடுப்பு மீது இருசக்கர ஊர்தி மோதியும், தவறி விழுந்தும் பல விபத்துகள் இதுபோன்று ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது; சாலை நடுவில் நின்று வாகனங்களை மறிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், அதையெல்லாம் மதிக்காமல் ஆய்வாளர் காமராஜ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் கருவுற்ற பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பொதுமக்கள் பெருமளவில் திரண்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால், நள்ளிரவில் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். காவல்துறை தடியடியில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இந்த செயலும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரி ஒருவரே மிருகத்தனமாக செயல்பட்டு அப்பாவி பெண்ணின் இறப்புக்கு காரணமாகி விட்டதால் தான் அதைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இச்சிக்கலை பொறுப்புடன் கையாள்வதற்கு பதிலாக தடியடி நடத்தி மக்களைக் காயப்படுத்தியது ஏற்க முடியாததாகும்.
காவல்துறையில் மனிதநேயம் கொண்டவர்கள் பெருமளவில் இருக்கும் போதிலும், ஆய்வாளர் காமராஜ் போன்ற மனநிலை கொண்டவர்களால் தான் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. காமராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தடியடி நடத்த ஆணையிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் மகத்துவம் குறித்து காவலர்களுக்கு போதிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.