Skip to main content

"இலவசமாகப் பொருட்கள் வழங்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

modi interact with karnataka bjp election booth agents

 

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 

இந்நிலையில் பிரதமர் மோடி, கர்நாடகாவில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பாஜகவை சேர்ந்த வாக்கு சாவடி முகவர்களுடன் காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது அவரை பேசுகையில், "கர்நாடக மாநில மக்கள் பாஜக மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர்களிடம் மக்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். நான் பாஜக தொண்டனாக கர்நாடகாவிற்கு வந்த போது மக்கள் என் மீது அன்பை செலுத்தினார்கள். கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன்.

 

இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாரத்துக்கு வரத் துடிக்கின்றன. அதற்காக எல்லா குறுக்குவழிகளையும் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நாட்டின் எதிர்காலம் குறித்து எவ்வித கவலையும் இல்லை. இலவசத்தையும் இலவசத் திட்டங்களையும் கூறி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் தேர்தலுக்கு முன்பாகவே காலாவதி ஆகிவிடுகின்றன. இலவசமாகப் பொருட்கள் வழங்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். பொதுமக்கள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

 

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதையே அனைவரும் இலக்காகக் கொள்ள வேண்டும். உங்களது வாக்குச்சாவடியில் பாஜக வென்றால் அந்த தொகுதியிலும் நிச்சயம் வெற்றி பெறும். வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையே தேர்தலில் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தரும். பாஜக தொண்டர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

 

நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு மேற்கொண்ட விரைவான செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி அமைந்தால் நாடும் மாநிலமும் சேர்ந்து வளர்ச்சியடையும். மத்திய அரசிடம் சண்டையிட்டு திட்டங்களைச் செயல்படுத்தாத அரசு கர்நாடகத்தில் அமைந்தால் மாநிலம் எப்படி வளர்ச்சி அடையும். இரட்டை என்ஜின் அரசு அமைந்தாலே மக்களுக்கான எல்லா நலத்திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த முடியும்" என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்