
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் அவ்வப்பொழுது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், அது பெரும் விவாதப் பொருளாகவும் மாறுவது வழக்கம். அந்த வகையில், அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகரான தலைவராக ராகுல் காந்தியை கருத முடியாது எனப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்தே ஆட்சிக்கு வந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி குறித்தும், மின்னணு இயந்திரம் குறித்தும் அவர் பேசியது காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என அவரிடம் விளக்கம் கேட்டு தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக, கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் விளக்கம் கேட்டு கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களில் விளக்கம் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.