
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (25.06.2024) நடைபெறுகிறது. இதனையொட்டி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசினார். அப்போது, சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி ஒருமனதாக நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் பாரம்பரியம் தொடர வேண்டும் வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங். இதற்கிடையே மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்பிகளில் ஒருவரும் முன்னாள் மக்களவை சபாநாயகருமான ஓம் பிர்லா தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
