பொதுச் சொத்துக்களைத் தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பொதுச் சொத்துக்களைத் தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவரின் பொதுச் சொத்தாகும். பொதுத்துறை இந்தியாவை தொழில் மயமான தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் பங்கு வகிப்பவை. பொதுத்துறை நிறுவனங்களை அமைக்க மாநில அரசுகளின் நிலங்களுடன் மக்களிடமிருந்து நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுடனும், மாநில அரசுகளிடமும் கலந்து ஆலோசித்த பின்னரே ஒன்றிய அரசு பெரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கை சிறு, குறு தொழில் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. இது விலைமதிப்பற்ற அரசின் சொத்துக்கள் ஒரு குழு அல்லது ஒரு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் செல்ல வழிவகுக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.