தமிழக பா.ஜ.க.வுக்கு நவம்பர் இறுதிக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிக்கலைத் தீர்க்க பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா சென்னைக்கு விசிட் அடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை ஈர்ப்பதுதான் பா.ஜ.க.வின் வியூகம். 15 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த பா.ஜ.க.வின் பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மனிடம், டெல்லி சில அசைன்மென்டுகள் கொடுத்துள்ளது.
தமிழகத்திலுள்ள தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பெரும்பான்மை சமூகத்திலுள்ள அரசியல் பிரமுகர்களை பா.ஜ.க.வில் இணைக்கும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார் நரசிம்மன். இதுகுறித்த பாசிட்டிவ் தகவல்கள் டெல்லிக்குத் தெரிவிக்கப்பட, அங்கு தேதி ஓ.கே. ஆனதால் அமித்ஷா முன்னிலையில் அவர்களை பா.ஜ.க.வில் இணைக்கும் விழாவை சென்னையில் நடத்த தீர்மானித்துள்ளார். இந்த தகவலை அறிந்த மாற்று கட்சியினர் கட்சியில் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகள் குறித்து பட்டியலை தயார் செய்து அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.