தி.மு.க. ஆட்சி அமைந்து 100 நாளில் உங்களது பிரச்சனை தீர்க்கப்படும். அப்படி தீர்க்கப்படாவிட்டால் பதிவு அட்டையுடன் கோட்டைக்கே வந்து என்னைச் சந்திக்கலாம் என உத்தமபாளையம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டு மனுக்களை வாங்கிய மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அதன்பின்பு பொதுமக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், “இங்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளீர்கள். பல மணி நேரம் காத்திருந்து உங்களது பிரச்சனைகளைச் சொல்வதற்காக இங்கு வந்துள்ளீர்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் உங்களது பிரச்சனைகளை சொல்லி புகாராகப் பதியும்போது எங்களது தோழர்கள், தொண்டர்கள் உங்களிடம் பதிவு செய்ததற்கான, பதிவு அட்டை ஒன்றை தந்திருப்பார்கள். அதனைப் பத்திரமாக வைத்திருங்கள்.
உங்களது மனுக்கள் அனைத்தும் புகார்ப் பெட்டி ஒன்றில் போடப்பட்டுள்ளது. இது உங்களது முன்னிலையில் சீல் வைக்கப்படும். இந்தப் புகார்ப் பெட்டி உடனடியாக சீல் வைக்கப்பட்டு அண்ணா அறிவாலயம் கொண்டு செல்லப்படும். அண்ணா அறிவாலயத்தில் மிகவும் பாதுகாப்பாக இது வைக்கப்படும்; மூன்று மாதங்களில் தேர்தல் முடிந்து முதல்வராகப் பதவிப் பிரமாணம் எடுத்தவுடன், முதலில் இந்தப் புகார்ப் பெட்டியைத்தான் நான் திறப்பேன்.
மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஒரு தனிக்குழு அமைக்கப்படும். தனி அமைச்சகம் உருவாக்கப்படும். அதிகாரிகளிடம் மக்களின் குறைகளை 100 நாளில் தீர்த்துவைக்க வேண்டும் என உத்தரவிடப்படும். மனுக்கள் மீதான பிரச்சனை தீர்க்கப்படும். அப்படி தீர்க்கப்படாவிட்டால் உங்களிடம் இந்தப் புகார் மனுக்களை தந்தபோது ஒரு பதிவு அட்டை ஒன்று தரப்பட்டுள்ளது, அந்தப் பதிவு அட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு என்னையே நேரடியாகச் சந்திக்கலாம். கோட்டைக்கே நேரடியாக வரலாம். கோட்டைக்கு வரும் போது எந்த தடையும் இருக்காது. அப்பொழுது, என்னிடம் வந்து நீங்கள் இந்தப் பிரச்சனை தீரவில்லை என்று கூறலாம். நான் உடனடியாக அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அப்படி இந்தப் பதிவு அட்டை காணாமல் போனால், இந்தப் பதிவு அட்டைக்கு எனத் தனியாக நம்பர் இருக்கும். அந்த நம்பரை, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பதிவு எண்ணை நீங்கள் சொன்ன உடன் உங்களுக்கு உரிய குறை என்னவென்று பார்க்கப்பட்டு அந்தப் பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்படும்” என்று கூறினார்.