சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேன் மூலம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், பிரச்சாரத்தின்போது ஒரு ஆள் நின்றால்கூட அவரைப் பார்த்து செல்கிறேன். மக்களை சமமாக பார்க்கிறேன் மக்களின் அன்பைப் பெறுவது முக்கியம் அந்த வாய்ப்பு ஸ்டாலினுக்கு போய்விட்டது கூட்டணியின் பலம் வலுவடைந்ததற்கு ஸ்டாலின் சத்தமே உதாரணம்.
இது ஜெயலலிதா கொடுத்த பதவி. நான் விவசாயி, இன்னும் வேளாண்மை செய்து வருகிறேன், தற்போது சென்னையிலும் விவசாயம் செய்கிறேன். புயல் சேதத்தை ஹெலிகாப்டரில் சென்று பார்த்தால் மரம் செடி, கொடிகள் சேதமானதை பார்க்க முடியும் என்று சென்றேன். அதற்கு ஹெலிகாப்டரில் போகிறேன் என்று ஸ்டாலின் புலம்பி வருகிறார். இதே கேரளா, கர்நாடக முதல்வர்கள் சென்றால் இவர் வாய்திறப்பதில்லை. தமிழக முதல்வர் ஹெலிகாப்டரில் சென்றால் மட்டும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதிமுகவில் சாதாரண விவசாயிகள் முதல்வராக முடியும்.
திமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாததை கூறியள்ளார் ஸ்டாலின். ஜெயலலிதா ஆட்சியில்தான் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 2000 வழங்கப்படும். சிதம்பரத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடு, 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றுவது, கொள்ளிடம் ஆற்றில் உப்புநீர் உட்புகாதவாறு தடுப்பணை கட்டுவது, 400 கோடியில் கதவணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற வளகம் கட்டியது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துகிறது. கோதாவரி, காவிரி ஆறுகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவது இதனால் ஆறுகள் வற்றாத ஜீவநதியாக இருக்கும் குடிநீரும் தொடர்ந்து கிடைக்கும். ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மத்தியில் நிலையான மோடி ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார். பேசும்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பதற்கு பதில் அண்ணா பல்கலைக்கழகம் என்று கூறிவிட்டு பேச்சை முடித்தார். அப்போது வேனில் அமர்திருந்த ஒருவர் அண்ணா இல்லை அண்ணாமலை பல்கலைக்கழகம் என்று கூறுங்கள் என்று கூறினார். அதன் பிறகு அவசர அவசரமாக தெளிவாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்று பேசினார். இதனை தொடர்ந்து சிதம்பரத்தில் தனியார் ஓட்டலில் வெள்ளிக்கிழமை இரவு தங்கிவிட்டு இன்று (சனிக்கிழமை) வல்லம்படுகை, நாகை ஆகிய இடத்திற்கு சென்று பிரச்சாரம் செய்கிறார்.