Skip to main content

ஒப்புதலுக்கு தாமதிக்கும் ஆளுநர்; மகாபாரதத்தை ஒப்பிட்டு விமர்சித்த முதல்வர்

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

mk stalin talk about online rummy and rn ravi

 

மகாபாரதத்தில் சூதாட்டம் உள்ளது என நினைத்து ஆளுநர்‌ ஆன்லைன்‌ ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று (01.03.2023) மாலை நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய எனக்கு 70வது பிறந்தநாள்.‌ நான் என்றும் உங்களின் ஒருவன். ‌ஸ்டாலின் என்ற பெயரில் நீங்கள் அனைவரும் உள்ளீர்கள். இங்கு கூடியுள்ள அனைவரும் கலைஞரின் பிள்ளைதான். மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக, மக்கள் கவலையை தீர்க்கும் தலைவனாக இருப்பேன். இந்த விழாவுக்கு தலைமை ஏற்றுள்ள துரைமுருகன் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டு மக்கள் எனக்கு இட்ட கட்டளையின் அடிப்படையில் முதல்வராக உள்ளேன். கடமையையும், பொறுப்பையும் நீங்கள் தான் கொடுத்தீர்கள். அவசர காலத்தில் சிறை சென்று சித்திரவதை அடைந்தேன். பொதுவாழ்க்கை என்றால் இப்படி தான் இருக்கும் என்று என்னை சிறைக்கு அனுப்பினார் கலைஞர்.

 

55 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எனது கால் படாத இடம் இல்லை. வெயில், இரவு-பகல் பாராமல் உழைத்த எனக்கு 70 வயது ஆகிவிட்டது என்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை. மக்களுக்காக போராடும் நமக்கு கால நேரம் இல்லை. நாளை வழக்கம் போல் பணியை தொடங்க உள்ளேன். எனக்கு 70 வயது என சொன்னால் ஆச்சரியப்படுகிறார்கள். வயது என்பது மனதை பொறுத்தது.‌ இளமை என்பது முகத்தில் இல்லை. மனதில் உள்ளது. லட்சியவாதிகளுக்கு வயதாவதில்லை. நாளுக்கு நாள் இளைஞன் ஆகிறேன். 

 

தொடக்கத்தில் இளைஞர் அணியில் இருந்த போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இன்று உங்கள் முன்பு ஒரு‌ உறுதிமொழி எடுக்கிறேன். அண்ணா, கலைஞர் கட்டியெழுப்பிய கழகத்தை நிரந்தரமாக ஆட்சியில் வைப்பேன். தி.மு.க. அரசு நெறிமுறைப்படி கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டியது அவசியம். கொள்கையை பரப்ப கட்சி, நிறைவேற்ற ஆட்சி. கடந்த 2 ஆண்டு காலத்தில் நிறைவேற்றி உள்ளேன். தேர்தல் வாக்குறுதி அளித்ததில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டது.‌ மீதமுள்ளதை இன்னும் ஒரு ஆண்டில் நிறைவேற்றுவேன். என்னை பொறுத்தவரையில் நம்பர் ஒன் ஆட்சியை தர வேண்டும். மல்லிகார்ஜுனா கார்கே என்னை வாழ்த்தியது எனக்கு பெருமை. இது இந்தியாவின் புதிய அரசியலுக்கான தொடக்கம். இன்றைய காலத்தில் மிக அவசியம் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல். இதில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மிக அவசியம். பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். 

 

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மாநிலப் பிரச்சினைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அடுத்தடுத்த வெற்றி என்பது நமது ஒற்றுமை. தமிழகத்தை போன்று தேசிய அளவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி அது வேறு. ‌ஒரே ஒரு செங்கலை வைத்து தமிழகத்தை பா.ஜ.க. கேவலப்படுத்துகிறது.‌ நீட் விலக்கு கொடுக்கவில்லை. சமஸ்கிருத மொழிக்கு கோடி‌கோடியாக நிதி ஒதுக்குகிறது. மகாபாரதத்தில் சூதாட்டம் உள்ளது என நினைத்து ஆளுநர்‌ ஆன்லைன்‌ ரம்மிக்கு தடை சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட கூட்டம் தான் எனது பிறந்தநாள் கூட்டம். வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியையும் வென்றாக வேண்டும். அதற்காக இன்று முதல் அனைவரும் உழையுங்கள். நாற்பதும் நமதே, நாடும் நமதே” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்