“தமிழகத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு கட்சி இல்லை. அது ஆடியோ, வீடியோ வெளியிடும் கோச்சிங் சென்டராக உள்ளது" என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி பரப்புரை நிகழ்த்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2வது நாளாக 21 ஆம் தேதி சூரம்பட்டி நால்ரோடு, ஆலமரத்து தெரு, காமாட்சி காடு, கருங்கல்பாளையம் காந்திசிலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசியதாவது, “ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தால் நான் மாதம் ஒரு முறை உங்களைச் சந்திக்க ஈரோட்டிற்கு வருவேன். தாய்மார்கள் முடிவு செய்தால் அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு சென்றால் மக்கள் துரத்தி அடிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மீசை இருக்கிறதா என்று கேட்கிறார். மீசை இருந்தால் ஷேவ் செய்து விடவா போகிறீர்கள். தமிழக உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவை தான் மக்கள் வாக்களித்து முதல்வராக்கினார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்து தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வரானார்.
அதிமுக ஆட்சியை விட்டு இறங்கிய போது 5 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு போனார்கள். அதன்பிறகு திமுக பதவியேற்ற போது, கொரோனா 2ம் அலை பரவல். அதிமுக ஆட்சியில் கொரோனா வந்த போது தட்டுகளை வைத்து தட்டியதும் விளக்குகளை ஏற்றியதும் உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், முதல்வராக பதவியேற்றதும் மு.க.ஸ்டாலின் முறையான மருத்துவம் செய்து மக்களைப் பாதுகாத்தார். அதோடு மட்டுமல்லாது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 4 ஆயிரம் நிவாரணத் தொகை கொடுத்தார். பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 குறைப்பு, பெண்களுக்கு இலவச பஸ், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, சிறார்களுக்கு காலை சிற்றுண்டி, 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். பெண்களுக்கான உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு உண்மையாக இருந்தது இல்லை. ஒன்றிய அரசுக்கு காவடி தூக்கிக்கொண்டு இருக்கிறார். அதிமுக கட்சி பஞ்சாயத்து, வேட்பாளர், சின்னம் என எல்லாவற்றையும் டெல்லி பாஜக தலைமை தான் செய்கிறது. கமலாலயத்தில் அப்பாயிண்ட்மெண்டிற்காக அதிமுக காத்திருக்கின்றது. தமிழக பாஜக கட்சியாக இல்லை. ஆடியோ, வீடியோ வெளியிடும் கோச்சிங் சென்டராக உள்ளது. மதத்தை வைத்து அரசியல் செய்வதால் தமிழக மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தரமாட்டார்கள். ஒரு மாதத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் ஏதாவது மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்படுவார். அதன்பிறகு பாஜக தலைவராக எடப்பாடி பழனிசாமி வந்துவிடுவார். அதிமுக எக்காரணம் கொண்டும் தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்க மாட்டார்கள்.
மோடியின் நண்பரான அதானியின் சொத்து மதிப்பு ரூ. 6 லட்சம் கோடியாக உள்ளது. உலகில் 2வது பெரிய பணக்காரர் அதானி. எந்த திட்டமாக இருந்தாலும் அதானிக்கு தான் கொடுக்கப்படுகின்றது. விமானம், ரயில்வே, துறைமுகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தும் அதானியிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. மோடிக்கு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே நண்பர். பிபிசி ஆவணப்படமானது 2 பாகங்களாக வெளியிடப்பட்டது. குஜராத் முதல்வராக மோடி இருந்த போது நடந்த இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாகவும், 300 பேர் மாயமானதாகவும் ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஆவணப்படத்தை பிரதமர் மோடி தடை செய்ததோடு, பிபிசி அலுவலகத்தில் ரெய்டு நடத்தி உள்ளார். இந்த கேவலமான ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டுமெனில் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இந்த தேர்தலில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு ஆய்வு செய்த வந்த பாஜக தேசிய தலைவர் நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், இந்த செங்கல் ஒன்று தான் அங்கு இருந்தது. கேடுகெட்ட பாஜகவுக்கு ஜால்ரா அடிக்கும் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டுமெனில் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்றார்.