மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
அதில், மதுரை மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அ.தி.மு.க கட்சி சார்பில் சரவணன் போட்டியிடுகிறார். அதனையொட்டி, அதிமுக வேட்பாளர் சரவணன் மதுரை தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுக வேட்பாளர் சரவணன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தனர்.
அப்போது பேசிய அ.தி.மு.க வேட்பாளர் சரவணன், “ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. எல்லோரும் ஏப்ரல் 1ஆம் தேதி என நினைத்து ஏப்ரல் ஃபூல் பண்ண மாட்டீங்க தானே. அப்ப பழைய வேட்பாளரான கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு தானே ஏப்ரல் ஃபூல் கொடுப்பீங்க” என்று கூறியதுமே அங்கிருந்த பொதுமக்கள் ‘ஆமாம் கொடுப்போம்.. கொடுப்போம்’ என்று கூறினர்.
இதனையடுத்து, பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “தமிழகத்தை போதை மாநிலமாகவும், கஞ்சா மாநிலமாகவும் மாற்றி இருக்கிற தி.மு.க.விற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். நம்மை ஏமாற்றியவர்களை நாம் ஏமாற்ற வேண்டும். எதிரியாக இருந்தாலும் நெஞ்சில் குத்துனா அவனை நம்ம பாராட்டுவோம். ஆனால், முதுகுல குத்துன பாராட்டுவீங்களா?. அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அந்த மாதிரி, அதை செய்வோம் இதை செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் எதையும் செய்யாமல் எந்த ஒரு திட்டமும் தராத தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனை இங்கே நிற்கிறார்.
வெங்கடேசனை யாராவது பார்த்திருக்கிறீர்களா? ஐந்து வருடம் ஆகிவிட்டது. இனிமே வந்தால் கேளுங்கள். இனிமேல், எப்படி ஓட்டு கேட்டு வருவீர்கள் என்று நீங்கள் கேளுங்கள். கேட்டீர்கள் என்றால் தான், அடுத்த வருகிற வேட்பாளர்கள் பயத்துடன் இருப்பார்கள். ஏனென்றால் உங்களைப் பார்க்காத பி.டி.ஆர் பழனிவேல் ராஜனுக்கு ஓட்டு போட்டீர்கள். அந்த தைரியத்தில் தான் அவர் மீண்டும் தேர்தலில் நிற்கிறார். எனவே அனைவரும், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.