ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்துக்கொண்ட அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும், முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கும் இடையே நடைபெற்ற சூடான வாக்குவாதம் பரபரப்பை கிளப்பிய நிலையில், செல்லூர் ராஜுவின் தோளில் கைவைத்து சமாதனம் செய்த அமைச்சரின் வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 10 கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர்களான செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது தொகுதியில் அரசு கல்லூரி வேண்டும் என விடுத்த கோரிக்கைக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளித்தார். அப்போது, 'நீங்கள் அதிகாரிகள் போன்ற மனப்பான்மையில் பேசாதிங்க' என கூறி வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து முதியோர் உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கும், நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். ஆனாலும், இதை ஏற்காத முன்னாள் அமைச்சர்கள், அங்கிருந்து வேகமாக புறப்பட்டனர்.
அப்போது கோபமடைந்த நிதியமைச்சர் பி.டி.ஆர், செல்லூர் ராஜுவை நோக்கி “நீங்க பேசுறப்ப நான் கேட்டேன்ல... கொஞ்சம் அங்க உட்காருங்க” என்றார். பின்பு, பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பி.டி.ஆர், இதுபோன்ற ஆய்வு கூட்டமெல்லாம் நடப்பது இது தான் முதல்முறை எனக் கூற, மீண்டும் கோபமடைந்த முன்னாள் அமைச்சர்கள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய முயன்றனர். அப்போது, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் தோளில் கை வைத்து சமாதானப்படுத்தினார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இரண்டு முக்கிய கட்சிகளின் தொண்டர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.