அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசினால் நாக்கை அறுப்போம் என அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிராக லஞ்சம், ஊழலை பற்றி பேசினால் அவர்களது நாக்கை அறுப்போம் என்று நேற்றையதினம் தஞ்சாவூரில் அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து கேள்விகேட்க தமிழக மக்கள் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஒரு அமைச்சரே வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது தமிழகத்திற்கு நல்லதல்ல.
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம், ஊழல் மலிந்துவிட்டது என்று பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குரல் எழுப்புவது ஒரு தனிமனிதன் மீதான குற்றச்சாட்டு இல்லை, தமிழக அரசின் மீதான குற்றச்சாட்டு. தமிழக அரசின் மீது சுமத்தும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சியாளர்கள்தான் விளக்கம் தர வேண்டுமே தவிர, கேள்வி கேட்போரின் நாக்கை அறுப்போம் என்று சொல்வது அடிப்படை பேச்சுரிமையை நசுக்குவதாகும்.
அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் இந்த பேச்சுதான் ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் எதிரானது. ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னால் அண்ணா தி.மு.கவை சேர்ந்த அமைச்சர்கள் எல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் பேசி வருகிறார்கள். ஆளும்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி பேசுவது தமிழகத்தை தவறான பாதைக்கு கொண்டு செல்லும்.
இப்படி கட்டுப்பாடற்று பேசுபவர்கள் அமைச்சர்களாக இருக்க தகுதியற்றவர்கள். முதல் நடவடிக்கையாக துரைக்கண்ணு அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இது மற்ற அமைச்சர்களுக்கு பாடமாக அமையும். வன்முறையை தூண்டும் விதத்தில் யார் பேசினாலும் அவர்களின் மீது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.