மரக்காணம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பத்தில் மட்டும் இதுவரை 9 பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் மாவட்ட ஆட்சியர் பழனி, வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், எஸ்.பி ஸ்ரீநாதா மற்றும் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.
சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், அமைச்சர் பொன்முடி பத்திரிகை மற்றும் ஊடகத்தினரிடம் பேசும் போது, "குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் அதிகரிக்கக் காரணம் கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகதான். இதைக் கட்டுப்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்பனை செய்ய வைத்ததே அவர்கள் தான்.
கடந்த இரண்டு ஆண்டுக் கால ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த மற்றும் தடுக்க சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தை உருவாக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். கடந்த ஆட்சியில் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 எம்.எல்.ஏக்கள் மீது சட்டசபையில் நடவடிக்கை எடுத்தது கடந்த கால ஆட்சியில் தான். கள்ளச்சாராயம் விற்பனை பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் அருகதையும் கிடையாது.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான் டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனை செய்யும் என அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள். அதற்கு சட்டசபையில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதற்காக என் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இப்படி தமிழகத்தில் சீர்கேடுகள் அதிகரிக்கக் காரணமானது அதிமுக ஆட்சி தான்" என்று குற்றம் சாட்டினார்.