சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் மெய்யநாதன், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளமங்கலம், பனங்குளம், கீரமங்கலம், செரியலூர், கரம்பக்காடு, நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உட்பட பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
கீரமங்கலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்தும் தலைவராக உருவெடுத்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரைக் கேட்டாலே பாஜக அப்படியே அதிருது.
மத்தியில் ஒரு பாசிச ஆட்சி, 2018 ல் கஜா புயலில் பாதிக்கப்பட்டோம், இப்ப மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்டோம், சென்னை, தூத்துக்குடி வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் களத்திற்கு சென்று அவர்களுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கினார். பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக போய் பாதிப்பிற்கு நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மத்திய அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்தார். பாதிப்பு என்ன என்பதை அறிக்கையாக கொடுத்தார்கள் ஆனால் இந்த நிமிடம் வரை ஒரு பைசா கூட வழங்காத பாசிச பாஜகதான், இந்த நாட்டை ஆள்கின்றவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். நாம ஜிஎஸ்டி வரி கட்றோம். ஆனால் நமக்கு எதுவும் செய்யாமல் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடன் கொடுக்கிறார்கள். கொடுத்த பிறகு தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் இங்கே கல்விக் கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போறாங்க.
தப்பித் தவறி அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் நடக்கும் கடைசித் தேர்தல் இது என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள். அதிபர் ஆட்சி போல வரும், அதிகாரங்கள் பறிக்கப்படும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. ஆகவே 130 கோடி மக்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலவச மின்சாரத்தை கலைஞர் தந்தார், ஆனால் அதிமுக எடப்பாடி ஆட்சியில் 10 ஹெச்.பிக்கு 3 லட்சம் பணம் வாங்கிட்டு மீட்டர் வச்சு பணம் வசூலிச்சாங்க. விவசாயிகளுக்கான அந்த மின்சாரத்தை இலவச மின்சாரமாக்கியது நம்ம முதலமைச்சர் தான். இன்று தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஆகவே தான் அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்” என்றார்.