Skip to main content

“பா.ஜ.க.வின் கைப்பாவையாக அ.தி.மு.க.” - அமைச்சர் மனோ தங்கராஜ்  

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Minister Mano Thangaraj condemn ADMK

 

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. 

 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

ஒன்றிய அரசின் இந்த ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ திட்டத்திற்கு தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது” என்று தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இன்று, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பா.ஜ.க.வின் கைப்பாவையாக அதிமுக செயல்படுகிறது. கொள்கை இல்லாத அதிமுக, அண்ணாவின் பெயரை வைத்துக் கொள்ள எந்தத் தகுதியும் இல்லை. சி.ஏ.ஜி. அறிக்கையில் வெளியான ஊழல், அதானி குழும முறைகேடு உள்ளிட்டவை குறித்து பா.ஜ.கவினர் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்