திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நெம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார் கோயில், மண்ணச்சநல்லூர், கூத்தூர், சமயபுரம் எஸ்.புதூர், இருங்களூர் ஆகிய பகுதியில் திமுக பெரம்பலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் கே.என். நேரு, “மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட நெம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார் கோயில் உள்ளிட்ட பகுதிகள் விரைவில் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது. இப்பகுதி ஒரு வளர்ச்சி பெறக்கூடிய பகுதி. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் மேலும் வளர்ச்சி பெறும். மேலும் இத்தொகுதி இடம்பெற்றுள்ள பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அருண் நேரு போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் நமது முதல்வர் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஆனால் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும் உதவி செய்யவில்லை. மாறாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகம் நிதி வழங்குகின்றனர். தேர்தல் வந்துவிட்டது என்பதால் பிரதமர் தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். தேர்தல் முடிந்த பின்னர் நம்மை எட்டிக்கூட பார்க்க மாட்டார். ஆதலால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்போதுதான் நாம் கைகாட்டும் பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும். ஆதலால் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அருண் நேருவை வெற்றி பெற செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வேட்பாளர் அருண் நேரு, “நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நமது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டது போல நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடக்கும் போர். இது ஒரு ஜனநாயக போர் என்று கூட சொல்லலாம். ஆதலால் இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
பிரச்சாரத்தின் போது ஒன்றிய கவுன்சிலர் அம்பிகாபதி, மதிமுக மாவட்ட செயலாளர் டி. டி.சி.சேரன், திருச்சி வடக்கு புகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.பி.எஸ்.செந்தில், ஒன்றிய செயலாளர் நீலமேகம் செந்தில், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் சுபாúஷ்ராமன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்