Skip to main content

“காவிரியில் நீரேற்று நிலையம் அமைத்து தீர்வு காண்போம்” - அமைச்சர் கே.என்.நேரு உறுதி

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Minister K.N. Nehru assured will find a solution by constructing a water station in Cauvery

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை மேற்கு ஒன்றிய தி.மு.க, குளித்தலை கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் குளித்தலை நகர் பகுதியில் நேற்று (08-04-2024) பெரம்பலூர் மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் அருண் நேரு கிராமம் கிராமமாகச் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது வைகைநல்லூர் பஞ்சாயத்து கீழ குட்டப்பட்டியில்  தமிழ்நாடு நகர் புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு அருண் நேருவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் நாம்  40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் 9 தொகுதிகளை உள்ளடக்கியது. திருச்சி மாவட்டத்திற்கு  நம்முடைய  முதலமைச்சர் 3000 கோடி ரூபாயை ஒதுக்கினார். வளர்ச்சிப் பணிகளை செய்து முடித்து இருக்கிறோம். கரூரை எடுத்துக் கொண்டால், மாவட்ட கழக செயலாளர் செந்தில் பாலாஜி எதைக் கேட்டாலும் செய்து தருகிற முதலமைச்சர் நமது முதலமைச்சர். குளித்தலையில் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்ட பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனை குளித்தலையில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தற்பொழுது ரூபாய் 46 கோடியில் கட்டிடப் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. நமது பிரதான பணி என்ன என்று சொன்னால், காவிரியின் அந்தப் பக்கம் முசிறி,  மண்ணச்சநல்லூர் ஆகியவையும்,  இந்தப் பக்கம் குளித்தலை,  கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளுக்கு காவிரியில் இருந்து  நீரேற்று நிலையங்கள் அமைக்கும்  திட்டம் மூலம் விவசாயிகளும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் திட்டம் உருவாக்கப்படும்.

பொதுமக்கள் மீதும் விவசாயிகள் மீதும் அக்கறை கொண்ட நம்முடைய  அரசு  இனி வரும் காலங்களில் இந்தத் திட்டத்தை கடமையாக எண்ணி செயல்படுத்துவோம். மத்தியில் நமது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமேயானால், நாம் நினைக்கிற அனைத்து பணிகளும் நிறைவேறும். விவசாயம் செழிக்கவும், வேலை வாய்ப்பினை உருவாக்கவும், பயனுள்ள இந்தத் திட்டத்தினை நிறைவேற்றியே தீறு வோம். இன்றைக்கு இருக்கிற மோடி அரசு சமூக நீதிக்கு எதிரானது. சமூக நீதிக் கொள்கை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இதற்கு முன்பு இத்தகைய சமூக நீதி கொள்கைகளை அவர்கள் தேர்தலில் அறிக்கையாக தந்ததில்லை. ஆனால் இன்றைக்கு தனது தேர்தல் அறிக்கையில் சமூக நீதி அரசாக தேர்தல் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

நீட் தேர்வை பொறுத்த வரையில் இது மாநில அரசுகளின் உரிமை என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். ஆரம்பத்தில் சொன்னார்கள், ஒன்றியத்தில் ஆளுகிற பிஜேபி அரசு 400 இடங்களை கைப்பற்றும் என்று. ஆனால் இன்றைக்கு நிலைமை 200-க்கு கீழாக  பெறுவார்கள் என கருத்துக் கணிப்புகள் கூறுகிறது. எனவே நமது இந்தியா கூட்டணி 270 இடங்களை கைப்பற்றினாலே ஆட்சி அமைக்க முடியும். நாம் 7 ல் ஒரு பங்காக இருக்கிறோம். எனவேதான், பெரம்பலூர் பாராளுமன்றத்தை பொறுத்தவரையில் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற நமது செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், நானும்  இருக்கிறேன். நாம் இணைந்து மக்களுடைய குடிநீர் பிரச்சனை, விவசாயிகளுக்கான தண்ணீர் பிரச்சனை எதுவாக இருந்தாலும்  இணைந்தே கட்டாயம் நிறைவேற்றுவோம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். எனவே உதயசூரியனுக்கு வாக்களித்து அருண் நேருவை  பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு தாருங்கள்” என கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து, பிரச்சாரத்தின் போது,வேட்பாளர் அருண்‌நேரு பேசியதாவது, “ஒன்றியத்தில் ஆளுகிற அரசு தமிழகத்தை அனைத்து வளர்ச்சி திட்டங்களிலும் வஞ்சித்து மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது. நூறு நாள் வேலை  வாய்ப்பு  திட்டத்திற்கு கடந்த ஆறு மாதங்களாக நிதி வழங்காமல் இழுத்து அடிக்கிறார்கள். நாம் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால் 26 பைசாவை மட்டும் தருகிறார்கள். ஆனால் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவர்கள் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால் அவர்களுக்கு இரண்டு ரூபாய் 70 பைசா தருகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு, தமிழ்நாட்டை மேலும் வளர்ச்சி பாதையில் செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியாக செய்து கொண்டுள்ளார்கள்.

எனவே நீட் தேர்வில் இருந்து விளக்கு பெற, இந்தப் பகுதி மக்களின் குடிநீர் விவசாயத்திற்கு தண்ணீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நமக்கு ஆதரவான அரசு ஒன்றியத்தில் அமைய வேண்டும். அப்பொழுது நாம் நினைக்கின்ற அத்தனை வளர்ச்சிப் பணிகளையும் மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்து வருகிற நலத்திட்டங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே நலத்திட்டங்கள் மேன்மேலும் உங்களை வந்தடைய நீங்கள் கட்டாயம் வருகிற 19 ஆம் தேதி உதய சூரியன்  சின்னத்தில்  வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை  வெற்றி பெறச் செய்து உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களுக்கு பணியாற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த மண்ணில் இருந்து கேட்கிறேன்  மண்ணின் மைந்தனான எனக்கு வாய்ப்பு தாருங்கள்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்