அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதன்முறையாக வயநாடு தொகுதியில் பேரணியாகச் சென்று மக்களை நேரடியாக ராகுல் காந்தி சந்தித்தார். அதன் பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், ''நான் வயநாட்டைச் சேர்ந்தவன் இல்லை. ஆனாலும் வயநாடு மக்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை கருதுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது என்ன என்று நான் பலமுறை சிந்தித்தது உண்டு. விளைவுகளைப் பொருட்படுத்தாது மக்களின் பிரச்சனைக்காக மக்கள் பிரதிநிதியானவர் குரல் கொடுக்க வேண்டும்.
எனது எம்.பி பதவியை பறிக்கலாம். ஆனால் மக்கள் பிரதிநிதியாக நான் தொடர்வதை பாஜகவினால் பறிக்க முடியாது. வயநாடு மக்களுக்கு என்ன தேவை என்பதற்காக போராடுபவன் தான் மக்கள் பிரதிநிதி. நாடாளுமன்ற உறுப்பினர் என்பது பெயருக்கு பின் வரும் சாதாரணமான தகுதிதான். வயநாட்டுக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக நான் குரல் கொடுத்தேன். சுதந்திரமாக ஒரு நாட்டில் வாழ வேண்டும் என்பதே வயநாடு மக்கள் மற்றும் இந்திய மக்களின் நோக்கம். நான்கைந்து பேருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கக்கூடிய நாட்டில் யாரும் வாழ விரும்பமாட்டார்கள். வெள்ளம் வந்தபோது வயநாட்டில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. எனது வீட்டை பாஜக அரசு எடுத்துக் கொண்டாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது. மக்களிடையே மோதலை உருவாக்குகிறது. பாஜகவை எதிர்த்து கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஒவ்வொரு சிறிய சமூகத்தினரையும், மதத்தினரையும் நான் மதிப்பேன். தற்போது நடப்பது இருவேறு சமூக கண்ணோட்டங்களுக்கும் இடையிலான மோதல். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் வயநாட்டு மக்களுக்காக போராடிக் கொண்டே இருப்பேன். என் எம்.பி பதவியைப் பறித்தாலும் வயநாடு மக்கள் உடனான எனது உறவைப் பறிக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக பாடுபடுவேன். நாடாளுமன்றம் சென்றிருந்தபோது ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர் குறித்து சில கேள்விகளைக் கேட்டேன். அதானி உடன் உங்களுக்குள்ள தொடர்பு என்ன என்று பிரதமரிடம் கேட்டேன். அதானிக்காக இந்திய வெளியுறவு கொள்கைகள் வளைக்கப்பட்டது'' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், "ராகுல் காந்தி மிகவும் தைரியமானவர். நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அடிப்படை கடமையாகும். ஆட்சியாளர்களால் பதிலளிக்க முடியாத கேள்விகளை ஒருவர் எழுப்புவதால் அவரைப் பற்றி அவதூறாகப் பேசி இரக்கமின்றி தாக்குவதுதான் சரியானது என்று பிரதமரும், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம் பி க்கள் என அனைவரும் கருதுவது விசித்திரமாக உள்ளது. இதனால் தான் ஆட்சியாளர்கள் ராகுல் காந்தியின் வாயை மூட முயல்கின்றனர். ராகுல் காந்தி யாருடைய முகத்திற்கு நேராகவும் கேள்விகளை எழுப்ப பயப்படமாட்டார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தியின் எதிர்காலம் நீதிமன்றத்தின் கைகளில் தான் உள்ளது. இருப்பினும் ராகுல் காந்தி தொடர்ந்து கேள்விகளை எழுப்புவார்.
ஒட்டுமொத்த அரசும் கௌதம் அதானியை பாதுகாக்க முயல்கிறது. பிரதமர் அதானியை பாதுகாக்கிறார். பாஜக நமது ஜனநாயகத்தை தலைகீழாக மாற்றுகிறது. பிரதமர் மோடி தினமும் விலை உயர்ந்த ஆடைகளை மாற்றுவதில் தான் கவனம் செலுத்துகிறார். ஆனால் அவர், நாட்டில் உள்ள ஏழைகள் படும் துன்பத்தை பற்றி கவலை படுவதில்லை" என்றார்.