திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி. அதிமுகவின் வேலூர் மேற்கு மா.செவாகவும் இருந்து வருகிறார். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறாமல் உள்ளது. அதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டமும் அடக்கம். உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காக அமைச்சர் வீரமணி தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக தனது தொகுதியில் மார்ச் 15ந் தேதி புல்லட் வாகனத்தில் தொகுதிக்குள் சில கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கறுப்பு கலர் பேன்ட் – சர்ட் ஆடையில் அதிகாரிகள், கார்கள் இல்லாமல் புல்லட்டில் பயணமாகி சென்று மக்களிடம் பேசியுள்ளார். அப்போது அவருடன் சில கட்சி நிர்வாகிகள் மட்டும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சரின் புல்லட் பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாராக இருந்தாலும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற அரசின் விதி உள்ளது. நீதிமன்றத்தின் கடுமையான ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற உத்தரவும் இருந்து வருகிறது. அப்படியிருக்க தமிழக அமைச்சராக உள்ள அமைச்சர் வீரமணி, இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியாதது சர்ச்சையாகியுள்ளது.
அதேபோல் அமைச்சர் ஓட்டிய புல்லட் வாகனம் காப்பீடு செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. காப்பீடு செய்யப்படாத வாகனத்தை அமைச்சர் ஓட்டுவது சரியா, முக்குக்கு முக்கு நின்று வாகன சோதனை நடத்தும் காவல்துறை அதிகாரிகள், இந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய வேண்டியது தானே என கேள்வி எழுப்புகின்றனர். விதிகளை மீறி அமைச்சர் வாகனம் ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.