தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. அண்மையில் அதிமுகவின் தோல்விக்கு பாஜவுடனான கூட்டணிதான் காரணம் என வெளிப்படையாக சி.வி.சண்முகம் விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் பேசியது விவாதமானது. பாஜக தரப்பில் கே.டி.ராகவனும் 'நாங்களும் உங்களைப் போலவே எண்ணுகிறோம்' எனக் கூறி மோதல் பட்டாசைப் பற்றவைத்தார். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதனையடுத்து 'பாஜக உடனான கூட்டணி உறுதியானது. மோடி மீதும், தேசத்தின் மீது உள்ள ஈர்ப்பாலேயே இந்த கூட்டணி நீடிக்கிறது' என்ற ஓபிஎஸ்ஸின் கருத்துக்குப் பின்னரே அந்த கூட்டணி விவாத மோதல் பட்டாசு வெடிக்காமல் போனது.
இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்களை, படங்களை அதிகமாகப் பயன்படுத்தாததுதான் காரணம் என அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்வர் ராஜா கூறியுள்ளதாவது, ''எதுவுமே இல்லாத கிராமங்களில் நாம் வாக்கு சேகரிக்கப் போகும்போதுகூட 30, 40 பேர் கூடுவார்கள். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா விசுவாசியாக அவர்கள் எதிர்பார்ப்பது, எம்.ஜி.ஆர் என்ற பெயரைச் சொல்கிறார்களா? ஜெயலலிதா என்ற பெயரைச் சொல்கிறார்களா? என்பதுதான். அதை நீங்கள் மறைத்தால் உங்களை அவர்கள் மறைத்துவிடுவார்கள். இந்த தேர்தலில் அதுதான் நடந்தது'' எனப் பேசியுள்ளார். இது மீண்டும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''ஓபிஎஸ், இபிஎஸ் எந்த கூட்டத்திலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை வணங்கியே பேசத் தொடங்குவார்கள். அவர்களுடைய படங்கள் எங்கும் இருக்கும். அன்வர் ராஜாவின் இந்த கருத்து தவறானது. அதை அவர் தான் சொல்லியிருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த கருத்து தவிர்க்கப்பட வேண்டியது'' எனத் தெரிவித்துள்ளார்.